வ.சுப.மா.வின் சொல்லாக்க முறைகள்



            தமிழ்ப் புத்திலக்கிய மரபில் பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., மறைமலையடிகள், பாவாணர், கி.இராமலிங்கனார், அறிஞர் அண்ணா, ரசிகமணி டி.கே.சி. முதலியோர் புதிய சொல்லாக்கங்களைப் படைத்து அளித்துள்ளனர். இந்த வரிசையில் வ.சுப.மாணிக்கனாரும் தனது எழுத்துகளின் வழிப் பல புதிய சொல்லாக்கங்களைத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியுள்ளார். இவற்றில் பல இன்றும் ஆய்வாளர்கள், ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. சில சொல்லாக்கங்கள் தனித்துவத்துடன் நிலைபேற்றை அடைந்துள்ளன. தமிழகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் வ.சுப.மா. உருவாக்கிய அலுவலகப் பயன்பாட்டிற்கான சொல்லாக்கங்கள் இன்றும் கையாளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘மொழிப்புலம்’, ‘புல முதன்மையர்’, ‘ஆளவை’, ‘ஆட்சிக் குழு’, ‘செம்பதிப்பு’ என்னும் சொல்லாக்கங்கள் பல்கலைக்கழகப் பயன்பாட்டில் உள்ளன. இச்சொற்கள் அனைத்தும் வ.சுப.மா. உருவாக்கியவை. இன்று புலமை உலகில் பலராலும் பரவலாகக் கையாளக் கூடிய சொல்லாகச் ‘செம்பதிப்பு’ நிலைபெற்றுவிட்டது. இச்சொல்லை உருவாக்கியவர் யார் என்று கேட்டால் அது பலருக்கும் தெரியாது. இதுபோல் இன்னும் பல சொற்களை வ.சுப.மாணிக்கம் உருவாக்கியுள்ளார். இவர் தனது நூல்களில் பயன்படுத்தியுள்ள தனித்தன்மை வாய்ந்த சொற்களையும் அவற்றின் ஆக்க முறைகளையும் இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது. இவரது நடைநலச் சிறப்பை, சொல்லாக்க முறையைச் ச.மெய்யப்பன் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.
            இவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற் செட்டும்            சுருக்கமும் தெளிவும் செறிவும் திட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித      நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்து வரும் இலக்கிய நடை.           புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை             தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிகளைக் கொண்டே அவர்    தமிழ்நடையின் தனித்தன்மையினை இனம் காணலாம். அவர் பயன்படுத்தும்          சொற்கள், சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை அவர் நடையின் இயல்பினை      இனங்காட்டுவன. (சங்க நெறி, ப. v)
குறிப்பாக வ.சுப.மாணிக்கம் தனது சொல்லாக்கத்தினைக் குறித்தும், புதிய சொல்லாக்கங்கள் எவ்வாறு தமிழ்மொழிக்குச் சிறப்பினைச் சேர்க்கின்றது என்பது குறித்தும் தனது நூல்களின் பல இடங்களில் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அவற்றுள் ஒன்று: ‘‘வளம் படைத்த தமிழ்மொழிக்குச் சொல்லாக்கிகள் மிகத் தேவை. அவ்வப்போது சொல்லை வடித்துக் கொடுக்காதவன் - வடித்துக் கொள்ளாதவன், மொழிக்கடன் ஆற்றாதவன் ஆகின்றான்; வேற்றுச்சொல் வரவுக்கு இடங்கொடுப்பவன் ‘ஆற்றுபவன்’ ஆகின்றான்” (காப்பியப் பார்வை, ப.194) என்பது இவரது கருத்து. வ.சுப.மாவின் சொல்லாக்கச் சிறப்பை விரிவாக ஆராய்ந்து மதிப்பீடு செய்த பழ.முத்துவீரப்பன் ‘‘இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளருள் வ.சுப.மாணிக்கத்தைப்போல் புதிய சொல்லாக்கங்களைப் படைத்துத் தந்தவர் எவரும் இலர். ‘இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லலாம்’ என்று குறிப்பிடுகின்றார். வ.சுப.மாணிக்கத்தின் சொல்லாக்கங்களைக் கீழ்க்காணும் நிலைகளில் வகைப்படுத்தி நோக்கலாம்.
-   நடைமுறையில் உள்ள இக்கால வழக்குச் சொற்பயன்படுத்தம்
-   சொற்சுருக்கங்களைத் தனது எழுத்துகளில் உருவாக்கித் தருதல்
-   ஒப்புமையாக்க நிலையில் எதிர்ச்சொற்களைப் பயன்படுத்துதல்
-   தமிழிற்குப் புதிய, செறிவுமிக்க சொல்லாக்கங்களை உருவாக்கித் தருதல்
-   ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக்கங்களைப் படைத்தல்
-   தமிழின் தலைசிறந்த நூல்களை, அவற்றைப் படைத்த புலவர்களைச் சிறப்பிக்கும்             வகையிலான சொல்லாக்கங்களை உருவாக்கிப் பயன்படுத்துதல்
மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றனர். குறிப்பாக அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்ட உறவுகளுக்குத் தருகின்ற மதிப்பினைக் காட்டிலும் தனது உணர்வுகளைப் புரிந்துகொண்ட நண்பனுக்குத் தருகின்ற இடம் தனித்துவமானது. உறவினர்களிடையே பகிர்ந்துகொள்ள முடியாத செய்திகளையும் நண்பனிடம் பகிர்ந்து கொள்கின்றனர். இத்தகைய சிறப்பு பொருந்திய உறவினை ‘நண்பன்’ என்று அழைக்கின்றோம். இது ஆண்பாற் சொல். இச்சொல்லுக்கு இணையான பெண்பாற் சொல் ‘நண்பி’. அதுபோல் வயதில் இளையவர்களைக் குறிக்கும் ஆண்பாற் சொல் ‘இளைஞர்’. இச்சொல்லுக்கு இணையான பெண்பாற் சொல் ‘இளைஞி’. நடைமுறை வாழ்க்கையில் நாம் கையாளக் கூடிய இச்சொற்களைத் தனது எழுத்தில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே ‘தமிழ்க் காதல்’ (ப.118) என்னும் நூலில் வ.சுப.மா. பயன்படுத்தியிருப்பது தனித்துச் சுட்டத்தக்கது. இதுபோல் அன்பி (செயலி), நண்பி (ஏசு பொருமாட்டி), கயத்தி (சைவச்சி), வேந்தி (நடிகச்சி) போன்ற இகர விகுதி சேர்ந்த பெண்பாற் சொற்களையும் இவர் பயன்படுத்தியுள்ளார். இவற்றில் சில சொற்கள் இவருக்கும் முந்தைய புலவர்களால் கையாளப்பட்டுள்ளன.
            உரைநடையில் நீண்ட தொடர்களைக் கையாளும்போது படிப்பவர்களுக்கு அது சலிப்பை ஏற்படுத்தும் சுருக்கமான சொற்களைப் பயன்படுத்துகையில் வாசிப்பவர்களுக்கு அது எளிதாகப் போய்ச் சேரும். அந்த வகையில் வ.சுப.மாணிக்கம் தன்னுடைய நடையில் நீண்ட சொற்களைக் கைக்கொள்ளாமல் சுருக்கமான சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு படைப்பின் சிறப்பை ஆராய்ந்து கூறும் அறிஞரை, எழுத்தாளரைக் குறிக்க திறனாய்வாளர் (அ) திறனாளி என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம். இச்சொல்லை இன்னும் சுருக்கமாக்கித் ‘திறனி’ (இலக்கியச் சாறு, ப.8) என்று குறிப்பிடுகிறார் வ.சுப.மா. இதுபோல், புதின ஆசிரியர் - புதினர் (மேலது, ப.14). கற்புடைய பெண் - கற்பி. உறுப்பினர், உறுப்பாளி - உறுப்பி. வளர்வு, ஆயுரை, இன்பி, வினைச்சி, வேந்தி (இந்திய இலக்கியச் சிற்பிகள், வ.சுப.மாணிக்கம், ப.42) உள்ளிட்ட சுருங்கிய சொல்லாக்கங்களை இவர் கையாண்டிருப்பதும் இத்தொடர்பில் எண்ணத்தக்கது. இதுபோல் இன்னும் பல சொற்களை அவரது எழுத்தின் வழிச் சான்றுகாட்ட முடியும். மன்னாயம் (சங்க நெறி. ப.8), தமிழ்ப் போலியன் (மேலது, ப.10), ஓர்மின் (மேலது, ப.10), வீட்டியல், பெண்ணியல் (மேலது, ப.16), வெற்றெழுத்தாளன் (மேலது, ப.19), தன்னளி மனப்பான்மை (மேலது, ப.20), கல்லாக் களிமகன் (மேலது, ப.24), சங்கப் புலமைச் சான்றோர்கள் (மேலது, ப.25), சங்கக் குழுவாயம் (மேலது, ப.33), காலவறிவு, சொல்லறிவு (மேலது, ப.38) முதலிய இச்சொல்லாக்கங்கள் அனைத்தும் இவர் புதியனவாக உருவாக்கியவை.
            ஒப்புமையாக்கம் (Analogical Creations) என்ற நிலையில், வழக்கிலும் இலக்கிய ஆட்சியிலும் நிலைபெற்றுள்ள சொற்களைக் கொண்டு அவற்றைப் போன்ற புதிய சொற்களையும் வ.சுப.மா உருவாக்கியுள்ளார். இது பற்றி இரா.மோகன் அவர்கள் குறிப்பிடும் கருத்து, ‘‘ஒப்புமையாக்கம் என்ற நெறியைப் பின்பற்றி வ.சுப.மா. படைத்துத் தந்துள்ள சொல்லாக்கங்கள் பலவாகும். அல்லெண்ணம் (நல்லெண்ணம்), இலக்கியல் (அறிவியல், உலகியல்), இல்லாட்சி (அரசாட்சி), குழமை (முதுமை), விதிகாட்டி (வழிகாட்டி), வீழ்வுகள் (வாழ்வுகள்), நிறைபாடு (குறைபாடு), சொல்லாளர் (எழுத்தாளர்), கேள்வியாளர் (கல்வியாளர்) முதலிய சொல்லாக்கங்கள் இவ்வகையினவாகும் (மேலது, ப.42). மேற்குறிப்பிட்ட சொல்லாக்கங்கள் சில இன்று வழக்கிழந்து போனாலும் அவை தனித்தன்மை வாய்ந்தவைகளாக உள்ளன. இச்சொல்லாக்கங்கள் தனித்தமிழ் அறிஞர்களின் எழுத்துகளில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன என்பது தனித்துச் சுட்டத்தக்கது.
            ஒரு சொல்லுக்கு இணையான பல புதிய சொல்லாக்கங்களையும் வ.சுப.மா. எடுத்தாண்டுள்ளார். குறிப்பாக எழுத்தாளரைக் குறிக்க, எழுத்தாளி, எழுத்தாள்வார், எழுத்துழவர், எழுத்தாளுநர், எழுத்துச் சான்றோர், எழுத்தாண்மையர், எழுதுகுலத்தோர் என ஏழு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் (இலக்கியச் சாறு, பக்.1-23). சங்க காலத்தில் சான்றோர் என்ற சொல் பெரியவர் என்ற சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் கல்வியில், பதவியில், வயதில், செல்வத்தில், புகழில், உடலில், பெருமை வாய்ந்தோரையெல்லாம் பெரியவர் என்பர். சான்றோர் என்ற இச்சொல்லைச் பெண்சான்றோர், வீரச்சான்றோர் எனப் பெண்களுக்கும், வீரர்களுக்கும் உரியதாக வ.சுப.மா. கையாளுகின்றார். மேலும் புறநானூற்றில் (புறம்.256) இருந்தும், பதிற்றுப்பத்தில் (பதிற்றுப்.14,82) இருந்தும் இதற்குரிய சான்றினைக் காட்டுகின்றார் (சங்க நெறி, பக்.56,57). ஒரு கருத்தை ஒரு சொல்லால் குறிப்பதைக் காட்டிலும் ஒரு தொடர் கொண்டு குறிப்பது நமது மொழி வழக்கு என்று கூறும் வ.சுப.மா. அதற்குரிய சான்றினையும் தருகின்றார். சங்க காலத்தில் காதலும் வீரமும் சிறப்புற விளங்கியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்விரண்டினையும் இணைத்து ‘காதற்போர்’ என்ற சொல்லை உருவாக்கியதோடு அதற்கான விளக்கத்தையும் கூறுகிறார். ‘‘நீரும் சுவையும் போலவும், பூவும் நிறமும் போலவும், உள்ளங்கை புறங்கை போலவும், தமிழினத்தின் வாழ்க்கையில் அகமும் புறமும் ஒரு பொருளாகக் கலந்திருந்தன. இத்தலைமைப் பண்பினைக் காதல் என்ற சொல்லாற் சொல்வதும் பொருத்தம் இல்லை; போர் என்ற ஒரு சொல்லாற் சொல்வதும் பொருத்தமில்லை; ஆதலின் காதற்போர் என்ற தொடரால் குறிப்போம்” (மேலது, ப.65) என்கிறார். இவ்வாறு வ.சுப.மா. உருவாக்கிய சொற்களிலிருந்து இவரது சொல் வளமையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
            அறிவியல் தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை வ.சுப.மா. உருவாக்கித் தந்துள்ளார். இது பற்றிக் குறிப்பிடும் இரா.மோகன் அச்சொற்களை ஆங்கில மூலத்தோடு எடுத்துக்காட்டுகின்றார். ‘‘குளிரகம் (Fridge), ஒலிப்பான் (Mike), அடக்கி (Break), நுரைப்பான் (Soap), முகமா (Powder), வெண் சுருள் (Cigarette), கட்டுத்தொகை (Deposit), செல்லுரிமை (Lbcense), பல்லுரசி (Tooth Brush), (தூசி, சாறு) வடிகட்டி (Filter), மேலாள் (Manager), வினைக்களம் (Offbce), செய்துணிக்கடை (Ready-made shop), முரண்பால் நோய் (Aids)” (இந்திய இலக்கியச் சிற்பிகள் - வ.சுப.மாணிக்கம், ப.43). இவற்றை ‘வ.சுப.மாணிக்கனார் சொல்லாக்கங்கள்’ என்னும் நூலுக்கு வழங்கிய பாராட்டுரையிலும் இவர் கூறியிருப்பது இணைத்து எண்ணத்தக்கது. வ.சுப.மா. தனது நூலின் பல இடங்களிலும் மற்றவர்கள் பெரிதும் கையாளாத சொற்களைக் கையாண்டு தனது தனித்துவத்தை நிலைநிறுத்துகின்றார். ‘‘சொற்பொழிந்தேன், வானொலிக்கின்றேன், பழமொழிகின்றோம், அட்டவணைப்பர், நன்றியன், விருப்பன், ஈடுபாடன், இலக்கியர், காப்பியர், இலக்கணர், தமிழ் வளர்ப்பிகள், இலக்கியப் படிப்பிகள், கல்வித் திட்டங்கள், பாடம் அமைப்பிகள், மாறுவேடி, நம்பிக்கைக் கேடி, அறிவு நாடிகள், நாட்டு நாடி, நாட்டுக் கேடிகள், தமிழ்மை, தமிழ் மன்னாயம், மக்கட் குழுவாயம், அணிய நாடுகள், சால்பியம், புரட்சியம், பொதுனியம், மக்களியம், ஒப்பியம், படைப்பியம், தமிழியம், உயிரியம், பண்டிதமணியம், கண்ணதாசம், இளங்கோவம் - சொல்லாக்கத் துறையில் வ.சுப.மா.வின் பங்களிப்புகள் இவை’’ (மேலது, ப.43). இவ்வாறு பலதரப்பட்ட சொல்லாக்கங்களை வ.சுப.மா. உருவாக்கியுள்ளார். தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் ஆகியோரையும், அவர்களது நூல்களையும் தனக்கேயுரிய தனித்துவ மொழியில் வ.சுப.மா. சிறப்பித்துள்ளார். இச்செய்திகளையே இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது.
            தொல்காப்பியத்தினைத் தமிழின் முதல் நூல் என்றும் தொல்காப்பியரைத் தமிழ் முதல்வன் (சங்க நெறி. ப.13) என்றும் சிறப்பிக்கின்றார். இவற்றோடு தொல்காப்பியத்தின் காலத்தைப் பற்றியும் இவர் குறிப்பிடத் தவறவில்லை. தமிழரின் வாழ்வியலைச் சிறப்பிக்கின்ற சங்க நூல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றியவை. ஆனால் தொல்காப்பியமோ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்காப்பியத்தின் காலத்தை வரையறுக்கின்றார் (தொல்காப்பியப் புதுமை, ப.9). மேலும் தொல்காப்பியம் தமிழுக்கு உயிர் நூலாகும். தமிழ் மக்களின் உலக வழக்கையும் செய்யுள்; நெறியையும் திறம்பட ஆராய்ந்து எழுதிய நாட்டு நூலாகும் என்றும் குறிப்பிடுகின்றார் (மேலது, ப.10). தொல்காப்பியம் மொழிக்கான இலக்கணமாக மட்டுமல்லாமல் தமிழரின் வாழ்வியலை வரையறுத்துக் கூறும் இலக்கணமாகவும் திகழ்கிறது என்கிறார் வ.சுப.மா.
            தொல்காப்பியத்தைப் போலவே சங்கப் பாடல்களையும் அவற்றைப் பாடிய புலவர்களையும் வ.சுப.மா. புகழ்ந்துரைக்கின்றார். சங்க இலக்கியங்களைத் தமிழ் தேசியவிலக்கியங்கள், நாகரிக மறைகள், மக்கட் பண்பிலக்கியங்கள் (சங்க நெறி, ப.viii), சங்கத் தொகை நூல்கள் (மேலது, ப.25), தொகையிலக்கியங்கள், பதிவிலக்கியங்கள் (மேலது, ப.64) என்று குறிப்பிடுகின்றார். அதுபோல் சங்கப் புலவர்களைச் சங்கப் புலமைச் சான்றோர்கள் என்று சிறப்பிக்கின்றார். எட்டுத்தொகை, பத்துப்பட்டில் உள்ள அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களினையும் இவர் சிறப்பாகப் போற்றிக் கொண்டாடுகின்றார். இயற்கைச் சூழ்நிலையில் வாழும் விலங்குகளுக்கும் மரஞ்செடி கொடிகளுக்கும் மனிதனைப் போலவே அன்பும் அறிவும் உண்டு என்பதைச் சுட்டி, அகநானூற்றின் காலத்தை இயற்கை யறிவுக் காலம் (மேலது, ப.26) என்று பதிவுசெய்கிறார். புறநானூற்றில் உள்ள ஒவ்வொரு பாடல்களும் பண்டைய வரலாற்றாய்வுக்கு உதவும் கல்வெட்டு (மேலது, ப.64) சான்று என்றும் கூறுகின்றார். இதுமட்டுமல்லாமல் பத்து சேர மன்னர்களின் மீது பத்துப் புலவர்கள் பாடிய  பதிற்றுப்பத்தினை வரலாற்றிலக்கியம், செய்கையிலக்கியம் எனப் புகழகிறார். இவற்றோடு சங்க காலத்தில் சோழ, பாண்டியர்களுக்கு எனத் தனி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. சேரர்களுக்குரிய தனி இலக்கியமாகப் பதிற்றுப்பத்து அமைந்துள்ளது. இக்காரணத்தால் பதிற்றுப்பத்தைக் குல வரலாற்று நூல் என்று போற்றுகின்றார் (மேலது, ப.102). ஐங்குறுநூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகியன தனிப்பாடல்கள் அல்ல. ஓர் ஆசிரியன் ஒருபொருள் மேல் திட்டமிட்டு பாடிய தொடர்பாடல்கள். எனவே இவற்றைத் தொகைப் போலிகள் என்றும் சொல்லாம் (மேலது, ப.203). மேலும் பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப்படையின் சிறப்பைப் பற்றித் தனியே குறித்துள்ளார். ‘வேறு எக்கடவுளுக்கும் அமையாத நிலையில் திருமுருகாற்றுப்படை என்ற தனிநெடும்பாட்டு தொகை நூலில் இடம்பெற்றிருப்பதும் முருகவேளின் சிறப்பு நிலைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்’ (மேலது, ப.149).
            தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகிய நூல்களின் வரிசையில் இவர் திருக்குறளையும் திருவள்ளுவரையும் கம்பரையும் வைக்கின்றார். மனிதாகப் பிறந்த இப்பிறப்பில் தமிழ் மொழியின் ஒரு பனுவலைக் கூட கற்காமல் வாழ்நாளை கழிப்பவர்களைத் தமிழ்ப் போலியன் என்று சாடுகின்றார். இவ்வாறு வாழாமல் பெருந்தமிழ்ப் புலவர் (மேலது, ப.60), உலகப் புலவர் (தொல்காப்பியப் புதுமை, ப.46) என்று சிறப்பிக்கப்படும் திருவள்ளுவரின் திருக்குறளையாவது கற்று அதன்படி நடக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். ‘கல்வியிற் பெரியவர் கம்பர்’ என்பதைப்போல் காப்பியத்திற் பெரியவர் கம்பர் (கம்பர், ப.106) என்று புகழ்கின்றார். கம்பராமாயண உருவாக்கத்தையும் அதன் பெயர்க்காரணத்தையும் இவர் பதிவுசெய்யத் தவறவில்லை. இதோடு கம்பராமாணத்திற்கு ஒரு புதிய பெயரினையும் வழங்குகின்றார். ‘வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவி தமிழில் கம்பர் படைத்ததால் கம்பராமாயணம் என்று வழங்கப்படுகின்றது. இது மொழிபெயர்ப்பு நிலையில் அமைந்தாலும் கூட தமிழ் மரபு மாறாமல் படைக்கப்பட்டிருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றோ. எனினும் கம்பரின் கம்பராமாயணத்தை மொழிபிறப்புக் காப்பியம்’ என்னும் புதிய பெயரால் வ.சுப.மா. அழைக்கின்றார் (கம்பர், ப.58).
            இவ்வாறு தமிழின் தலைசிறந்த நூல்களையும் புலவர்களையும் வ.சுப.மா. தனது சொல்லாக்கங்களால் விதந்துரைக்கின்றார்.
தொகுப்புரை
-  செவ்வியல் தன்மை கொண்ட தமிழ்மொழிக்குக் காலந்தோறும் பல புதிய சொல்லாக்கங்கள் தேவை. இத்துறையின் தேவையை முன்னிட்டே தமிழ்மொழியின் படைப்பாளர்களும், எழுத்தாளர்களும் அவ்வப்போது புதிய சொல்லாக்கங்களை உருவாக்கி வந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க தனிப்பெரும் ஆளுமையாக வ.சுப.மாவைக் கருத முடியும். தமிழின் பல்வேறு துறை சார்ந்த சொற்களை இவர் உருவாக்கியுள்ளார்.
-  வ.சுப.மா. பெற்றிருந்த இலக்கண இலக்கியப் புலமையின் தனித்துவத்தை அவரது புதிய சொல்லாக்கங்கள் உணர்த்துகின்றன. நவீனக் கால மாற்றத்திற்கேற்பவும் அறிவியல் வளர்ச்சிக்கேற்பவும் மக்களின் வாழ்விற்குப் பயன்படும் வகையில் வ.சுப.மாவின் சொல்லாக்கங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இங்கு எடுத்துக்காட்டி விளக்கப்பட்ட சொல்லாக்கங்களில் நிறுவனம் சார்ந்து பயன்படுத்தப்படும் சொற்கள் மக்களிடையே இன்றும் புழக்கத்தில் இருப்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. அதுபோல் அறிவியல் துறை சார்ந்து இவர் ஆக்கிய சொல்லாக்கங்கள் அத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருவதையும் பார்க்க முடிகின்றது. இச்சொல்லாக்கங்களைத் தேவை கருதி உருவாக்கப்பட்டவை எனலாம்.
-  வ.சுப.மா.வின் சொல்லாக்கங்கள் மரபில் இருந்து மாறுபட்டு அமையாமல் மரபோடு பொருந்தி அமைவதும் கருதத்தக்கது. அந்த வகையில் தனக்கு முந்தைய சான்றோர்கள் உருவாக்கிய சொற்கலையாக்கத்தின் தொடர்ச்சியில்; புதிய சொற்களை வ.சுப.மா. படைத்து அளித்துள்ளார்.
-  தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், கம்பராமாயணம் முதலிய நூல்கள் மீது இவர் கொண்டிருந்த ஈடு இணையில்லா பற்றினை, அந்நூல்கள் குறித்தும், அவற்றின் புலவர்கள் குறித்தும் இவர் புகழ்ந்துரைத்துள்ள சொல்லாக்கங்களின் வழி; உணர்ந்;து கொள்ள முடிகின்றது.
-  வ.சுப.மாவின் சொல்லாக்கங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்குகையில்;; அவை சமூக வழக்கு, இலக்கிய வழக்கு, கலைச்சொல் உருவாக்கம் எனப் பலநிலைகளுக்கு முன்னோடித் தன்மை கொண்டனவாக உள்ளன.
துணைநூற் பட்டியல்
1.   மாணிக்கம்,வ.சுப., இலக்கியச் சாறு, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், தொகை முதற்பதிப்பு, 1987.
2.   மாணிக்கம்,வ.சுப., கம்பர், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், திருந்திய பதிப்பு, 1987.
3.   மாணிக்கம்,வ.சுப., காப்பியப் பார்வை, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், தொகை முதற்பதிப்பு, 1987.
4.   மாணிக்கம், வ.சுப., சங்க நெறி, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், தொகை முதற்பதிப்பு, 1987.
5.   மாணிக்கம், வ.சுப., தமிழ்க் காதல்,  பாரிநிலையம், சென்னை, முதற்பதிப்பு, 1962.
6.   மாணிக்கம்,வ.சுப., தொல்காப்பியப் புதுமை, பேகன் பதிப்பகம், காரைக்குடி, மூன்றாம் பதிப்பு, 1967.
7.   முத்துவீரப்பன்,பழ., வ.சுப.மாணிக்கனாரின் சொல்லாக்கங்கள், மணிவாசகர் பதிப்பகம், முதற்பதிப்பு, 1988.

8.   மோகன்,இரா., இந்திய இலக்கியச் சிற்பிகள் - வ.சுப.மாணிக்கம், சாகித்திய அக்காதெமி, புதுதில்லி, இரண்டாம் பதிப்பு, 2007.

Comments

Popular posts from this blog

புதுக்கவிதை : இலக்கண வரையறை உருவாக்க முயற்சிகள்

திருக்குறள் யாப்பியல் ஆய்வுகள் (பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு ஆய்வுகளை முன்வைத்து)

நாலடியார் யாப்பியல்: யாப்பருங்கல விருத்தியுரை