பிரசண்ட விகடன் (இதழ்த் தொகுப்பு அரசியலை முன்வைத்து)


       பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பு வழியே தமிழ்ச்சமூக வரலாறு எழுதியல் என்பது சாத்தியப்பட்டது. நவீன அச்சு ஊடுக வளர்ச்சியின் பின்புலத்தில் நூல்கள் அச்சாக்கம் பெற்று அனைவரிடமும் பரவலானது. பல நிலைகளில்/ தன்மையில் எழுதப்பட்ட எழுத்துக்களைத் தொகுத்து நோக்கும்போது அதன்வழி ஒரு புது வரலாற்றைக் கட்டமைக்கலாம். அந்தப் பின்புலத்தில் இந்திய விடுதலைக்குப் பிறகு ஐரோப்பியர்களால் முன்னெடுக்கப்பட்ட பத்திரிகைத் துறை தமிழில் அதிவேக வளர்ச்சிப் பெற்று வந்தது. சமகால நிகழ்வுகளை முன்னிறுத்தியும் கடந்தகால சமூகப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடியும் எதிர்கால வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டும் இத்துறை இயங்கி வந்தது. அந்த வரிசையில் இந்தியவிடுதலைக்குப் பிறகு கலை இலக்கியப் பிரக்ஞையோடு, சமூக மற்றும் இனவுணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையில் சில பத்திரிகைகள் செயல்படலாயின. அந்த வரிசையில் இருப்பது ‘பிரசண்ட விகடன்’ இதழாகும்.

     தனக்கு முந்தைய பத்திரிகைகள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான உணர்வுகளை ஊட்டின; தீவிர இலக்கிய உருவாக்கத்தினையும் அடையாளப்படுத்தின. இப்பத்திரிகையோ அதற்கு அடுத்தகட்ட முயற்சிகளில் இறங்கியது. இந்திய விடுதலைக்குப் பிந்தைய அரசமைப்பின் வழி மொழிவழி மாநில சுயாட்சிக் கட்டமைப்புப் பற்றிய விவரங்களுக்கும் பழம் பெருமையைப் போற்றலுக்கும் பேரிடம் அளித்தது. இத்தகைய பின்புலத்தோடு இயங்கிய இப்பத்திரிகையைத் தொகுக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது சிறிதுகூடப் பொறுப்பில்லாமல் தொகுக்கப்பட்டுள்ளதைப் ‘பிரசண்ட விகடன்’ இதழ்த்தொகுப்பு இரண்டு பாகங்கள் (2003) வெளிப்படுத்துகின்றன.

  அச்சு ஊடக வளர்ச்சியின்சாதனையாகக் கருதப்படும் பத்திரிகைகளை/ நூல்களைத் தொகுக்கும் முயற்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு அதிக அளவு சாத்தியமானது. இவ்வகைத் தொகுப்புகள் எவ்வகை முறைமையிலானவை என்று வினா எழுப்பினால் தொகுபபவரின் பின்புலம் இங்கு அடையாளப்படுகிறது. இத்தகைய கருத்தியலை முதன்மையாகக் கொண்டு இன்று ஆவணப்படுத்தப்பட்ட பத்திரிகை அல்லது இதழ்த் தொகுப்புகளைப் பார்க்கும்பொழுது ஒருவித மனஎரிச்சலை அவை உண்டாக்குகின்றன. இதற்குக் காரணம் எது என ஆராய்ந்து பார்க்கின்ற போது இவ்வகையான பணிகளை மேற்கொள்பவர்களின் அரசியல் பார்வை, கவனமின்மை, தீவிரமான தேடுதலின்மை போன்ற தன்மைகள் அதில் வெளிப்படுகின்றன. இவ்வகையான தொகுப்பு முயற்சிகள் 1960களுக்குப் பின்பே பெரிதும் கவனப்படுத்தப்பட்டன. அதில் மேற்குறிப்பிட்ட பண்புகள் ஊடாடி இருப்பதைப் பார்க்கலாம்.

   இதழ்த் தொகுப்பு பணியினை முன்னெடுப்பவர்கள் அவ்விதழ் குறித்த விரிவான வரலாற்றுப் புரிதலைக் கொண்டிராமல் நூலகங்களில் கிடைப்பவற்றையும் தனிமனிதச் சேகரிப்புகளையும் கொண்டு கிடைக்கும் இதழ்களை ஆவணப்படுத்துதல் என்ற தன்மையினை முன்னிறுத்தி இயங்குகின்றனர். இவ்வாறான முயற்சியின் வெளிப்பாடாக இருப்பது பிரசண்ட விகடன் இதழ்த்தொகுப்பாகும். இதில் தலையங்கம், கட்டுரை, கவிதை, நாடகம், கதைகள், மொழிபெயர்ப்புகள் முதலியன தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பெரிதும் கதைகளே இவ்விதழ்த்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

-    இளம்படைப்பாளர் - புதியவர்களின் கதைகளை வரவேற்று / வெளியிட்டு அங்கீகரித்தல்

-   வெகுசன மக்களால் பெரிதும் போற்றிக் கொண்டாடப்படும் ஊடகமான நாடகம் 

-   திரைப்படம் குறித்த விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம்                                 வெகுமக்களுடனான தனது உறவை வலுப்படுத்திக் கொள்ளல்.

-   தமிழ்மொழியின் ஆதியிலக்கியங்களைச் சமகால வாசிப்புக்குட்படுத்துவதன் வழி அதன் பழம்பெருமையை மீட்டுருவாக்கம் செய்தல்.

- தன்னுள் (நாரண துரைக்கண்ணன்) பெரும்தாக்கத்தை ஏற்படுத்திய பழந்தமிழ் இலக்கியங்களின் சுவையைப் பறைசாற்றுதல்

-  மொழிவழி மாநிலம் உருவாக்கப் பின்வுலத்தில் இயங்கும் அரசியல் சூழல்களைக் குறிப்பிட்டுச்சாடல். இவற்றோடு தாய்மொழிபபற்றையும் சமூகப் பற்றையும் அடையாளப்படுத்துதல்.

- தனி மனித புகழைக் கொண்டாடுவதன்வழி அவர்கள் இயங்கிய விதத்தை முன்னிறுத்துதல்

-  தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளினைப் படைத்து அதன்வழிச் சமூகக் கட்டமைப்பை உடைத்தெறிதல்/ஏற்றத் தாழ்வுகளை அகற்றுதல் உன இவ்விதழ்த் தொகுப்பின் உள்ளடக்கங்களைப் புரிந்துகொள்ளலாம்.

தனக்கு முந்தைய இதழ்கள் சிறுகதைகளுக்கு எத்தகைய அங்கீகாரத்தை அளித்தனவோ அதைவிட அதிக அளவு அங்கீகாரத்தைப் பிரசண்ட விகடன் இதழ் வழங்கியுள்ளது. இதை வல்லிக்கண்ணன் கூற்றால் அறியலாம். ‘‘இந்த வகையில் ‘பிரசண்ட விகடன்’ ஆரம்பகால எழுத்தாளர்களின் பயிற்சிக் கூடமாக அமைந்து அவர்களது வளர்ச்சிக்கு உதவி புரிந்தது. தமிழ் எழுத்துலகில் பிற்காலத்தில் பெயர்பெற்றுப் புகழுடன் விளங்கிய பல எழுத்தாளர்களின் முதல் கதையும் ஆரம்பகால எழுத்துகளும் ‘பிரசண்ட விகடனில்’தான் பிரசுரம் பெற்றன. வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், கு.அழகிரிசாமி, டி.செல்வராஜ், தி.க.சிவசங்கரன், துறைவன், கந்தசாமி, சீரஞ்சி இப்படி எத்தனையோ பேர்!” (வல்லிக்கண்ணன், முத்துக்குமாரசாமி, ப., (தொ-ர்) 2003:5,6) இக்கருத்தினை நோக்கும்பொழுது இவ்விதழின் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் கதைகளுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை உணரலாம்.
 இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, இவ்வகையிலான முயற்சிகள் இதழ்த்தொகுப்பில் இடம்பெற்றுள்ளனவா? என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. வல்லிக்கண்ணனாலே சுட்டிக்காட்டப்பட்ட இத்தன்மை அவர் தொகுத்த இத்தொகுப்பில் இடம்பெறாமல் போனது பெரும் வியப்பே. ஆனால், இத்தொகுப்பில் 1950களுக்குப் பிறகான கதைகளே தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் முழுமை/நம்பகத்தன்மையில்லை. 1950-1957 வரையிலான எட்டாண்டு கதைகள் மட்டுமே இரண்டு தலையணைகள் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. முழுமையாக இதழ் வெளிவந்த காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு தொகுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் இது போன்ற பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட தொகுப்புகளை உருவாக்க முடியும்.
            வெகுசன மக்களின் ஊடகமாக விளங்கிய நாடகம், திரைப்படங்கள் குறித்து முன்வைத்த பிரசண்ட விகடன் கருத்துகளில் பல சுவையான தகவல்களைக் காணலாம். வணிக நோக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டியங்கிய இவ்வூடகத்தின் வழி வெளிவந்த சில காத்திரமான படைப்புகளை விமர்சித்து அதனைப் பாராட்டி எழுதி மக்களிடையே அதன் தாக்கத்தைப் பிரசண்ட விகடன் இதழ் ஏற்படுத்தியது. இதனைப் பின்வரும் கருத்து அடையாளப்படுத்துகின்றது.

“சினிமா விமர்சனத்திலும் ‘பிரசண்ட விகடன்’ தீவிர உற்சாகம் காட்டியது. நேயர்கள் எழுதிய திரைப்பட விமர்சனங்களை வரவேற்று அது பிரசுரித்தது. மதுரை முத்து கிருஷ்ணன் என்பவர் ‘மமுகி’ என்ற பெயரில், அக்காலத்திய திரைப்படங்களுக்கு விரிவான விமர்சனம் எழுதிக் கொண்டிருந்தார். விறுவிறுப்பு, வேகம், குத்தல், கிண்டல், முரட்டு, நையாண்டி எல்லாம் கலந்து அவர் எழுதி வந்த விமர்சனங்கள் வாசகர்களுக்கு மிகுந்த மகிழ்வுஅளித்தன” (வல்லிக்கண்ணன், முத்துக்குமாரசாமி, ப., (தொ-ர்):2003:6) என்ற கருத்தை வல்லிக்கண்ணன் முன் வைக்கின்றார். இப்பின்புலத்தோடு இதழ்த் தொகுப்பினை வாசிக்கையில் சில கட்டுரைகள் இத்தன்மையில் அமைந்துள்ளதைப் பார்க்கலாம். ஆனால் இவர் (வல்லிக்கண்ணன்) குறிப்பிட்டுச் சொல்லும் மதுரை முத்துகிருஷ்ணன் எழுதிய திரைப்பட விமர்சனங்கள் இத்தொகுப்பில் இல்லை என்பது ஆதர்சமான உண்மையாகும்.

    மனிதன் என்றொரு நாடகத்தை இயக்கி நடித்தபோது வெகுசிரத்தையோடு நடிக்கப்பட்டு அறிஞர்கள், மக்களின் பாராட்டுதல்களைத் தாம் பெற்றதாக டி.கே.சண்முகம் குறிப்பிடுகிறார். சமூக யதார்த்தத்தைக் கதைக்களமாகக் கொண்டது மனிதன் நாடகம். இது பின்னர்த் திரைப்படமாக வெளிவந்தபோது நாடத்தினின்று ஒருபடி மேற்சென்று, சமூக இயங்கு தளத்திலுள்ள வெவ்வேறுபட்ட தனிமனித உணர்வுகளை மிகச் சரியாகச் சித்திரித்திருக்கிறது. கலை இலக்கியத்திற்குரிய அத்தனை உயிர்ப்புகளையும் மனிதன் திரைப்படம் கச்சிதமாகக் காட்டி விட்டதை அவரே கொண்டாடியிருக்கிறார்.

வல்லான் வகுத்த சித்திரம் போல் மனிதனை ஒரு கலைச்சித்திரமாக்கித் தந்திருக்கிறார் கலைஞர் ராம்நாத். மனிதனைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது படத்தைப் பார்த்துவிட்டு வந்தது போன்ற உணர்ச்சியுண்டாகவில்லை. ஒரு நல்ல இலக்கியத்தைப் படித்து முடித்தது போன்ற எழுச்சிதான் எனக்குண்டாயிற்று (வல்லிக்கண்ணன், முத்துக்குமாரசாமி, ப., (தொ-ர்): 2003:129)

சினிமா பாணிக்கேற்ப மாற்றாமல் கதையைக் கையாண்ட இயக்குநரை, நடிகர்களை வெகுவாகக் கொண்டாடியுள்ளார். இதைப் பார்க்கின்றபோது வணிக நோக்கில் வெளிவந்த படங்களைக் குறித்து எழுதப்பட்ட விமர்சனங்களைப் பிரசண்ட விகடனில் வெளியிடவில்லை. கலை இலக்கியத் தரமுடைய / மக்களை வெகுவாகக் கவர்ந்த இலக்கியவாதிகளால் கொண்டாடப்பட்ட/ சமூகத் தளத்தில் கதைக்கருவால் ஓர் அதிர்வலையை உண்டாக்கிய திரைப்படங்களின் விமர்சனைங்களையே வெளியிட்டு இதழியல் வரலாற்றில் தனித்துவத்தை இவ்விதழ் பெற்று நிற்கிறது.

     தமிழ்மொழியின் ஆதியிலக்கியங்களான சங்க இலக்கியங்களைச் சமகாலப் புரிதல்களோடு எழுத்தாளர்கள் வாசிக்க முயன்றதை இதழ்த்தொகுப்பில் காணலாம். இதுகுறித்து வந்த கருத்துகள் பழந்தமிழர்களின் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்கின்றன. இதன்வழி உலக அளவில் தொல்பழம் பண்பாட்டு வளர்ச்சியைக் கொண்ட சமூகமாகத் தமிழ்ச்சமூகத்தை முன்னிறுத்துகின்றனர். சங்க இலக்கியத்தில் மிக அழகாகச் சித்திரிக்கப்பட்ட காதல் உணர்வுகளையும் புலவர்களால் போற்றிக் கொண்டாடப்பட்ட மன்னர்களின் வீரத்தினையும் சில கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. அத்தன்மையில் உலக இயல் (செப்.1954) கோயிலா? நீறு பூசிய யானையா? (செப்.1954) துரோகம் செய்யினும் தூர விலகோம் (அக்.1954) காவலனின் கடமை (அக்.1954) குற்றமும் தண்டனையும் (ஆக.1954) காதலியின் தவறு (நவ.1954) போன்ற கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. இதைப் பார்க்கின்றபோது இதழாசிரியர் நாரண துரைக்கண்ணனுக்கு இருந்த தமிழ்ப்பற்றை, பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டைக் காணமுடிகிறது. இவரே பல புனைப்பெயர்களில் தாம் படித்து ரசித்தவற்றைக் கட்டுரையாக ஆக்கி மக்களிடையே பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை இவ்விதழியல் வரலாறு நமக்கு காட்டுகின்றது.

   இந்திய விடுதலைக்குப் பிறகு உருப்பெற்ற அரசியலமைப்பில் மொழிவழி மாநிலப் பிரிப்பும், மாநிலங்களின் எல்லை வரையறைகளும் பெரும் விளைவை ஏற்படுத்தின. 1950களில் மொழிவழி மாநில அமைப்பு இந்திய அளவில் விரிவாகப் பேசப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆராய்ந்து நோக்கப்பட்டன. ‘இவ்வாறு மாநில எல்லைகளைப் பிரிக்கும்போது சில நன்மைகள் ஏற்படக்கூடும். இது இந்திய அளவில் மக்களிடையே பெரும் விரிசலையும் ஜனநாயக விரோதத்தையும் விளைவிக்கும்’ எனப் பண்டித ஜவஹர்லால் நேரு கருதியதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில தலையங்கங்கள் பதிவு செய்துள்ளன. இக்கருத்திற்கு எதிரான நிலையில், மாநில சுயாட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கின்ற போது மக்களின் வாழ்க்கைத் தரம உயர்வடைவதைக் காணலாம். இதனோடு ஒரு குறிப்பிட்ட மொழியினத்தின் பண்பாடு சிதைவுறாமல் இருப்பதையும் தடுக்கலாம் என்ற கருத்தும் வலுப்பெற்றதைச் சில தலையங்கங்கள் பதிவு செய்துள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த காஷ்மீர் எல்லைப் பகிர்வு குறித்த சில தரவுகளையும் இவ்விதழ் முன்வைத்துள்ளது. இவ்வெல்லைப் பகிர்வில் ஊடாடிவரும் உலக அளவிலான அரசியல் புள்ளியையும் இதில் இடம்பெற்றுள்ள கட்டுரை (நல்ல முடிவு.பிப்.1954) சுட்டிநிற்கிறது.

      1950களில் மொழிவழி மாநில அரசை உருவாக்கும் கொள்கைகள் உருப்பெற்று தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா எனப் பிரிக்கப்பட்டன. எனினும் இம்மாநில எல்லைகள்/ உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் சரவர எல்லை வகுக்கப்படாமையே ஆகும். புதிய ஆந்திர அரசு 1953இல் உருப்பெற்றபோது இம்மாநிலத்திற்குரிய எல்லைப் பிரிப்பில் சில சிக்கல்களுக்கு முடிவு கட்டப்பட்டன; சில முடிவெடுக்காமல் விடப்பட்டன. இதைப் ‘புதிய ஆந்திர அரசு’ (ஏப்.1953) என்னும் தலையங்கத்தின் வழி அறியலாம்.

    தமிழை ஆட்சி மொழியாக்குவதில் சில சிக்கல்கள் இன்றுவரை இருந்து வருகின்றன. எனினும் இது தொடர்பான போராட்டஙகள் முன்னெடுக்கப்பட்ட போது அதற்குப் பெரும் வரவேற்பை அளித்து, மக்களிடையே விழிப்புணர்வைப் பிரசண்ட விகடன் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பக் கல்வியில் தமிழைப் பாடமாகக்குவதில் உள்ள சிக்கல்கள் தொடங்கி, இலங்கையில் நடைபெற்றுவந்த போராட்டங்கள்வழித் தமிழர்களுக்குரிய அங்கீகாரங்களைப் பெற்றுத் தருவதற்கான விதிமுறைகளை இவ்விதழ் முன்வைத்தது. தமிழை ஆட்சிமொழியாக்குவதிலும், போதனா மொழியாக்குவதிலும் தன்னால் இயன்ற பங்களிப்பைப் பிரசண்ட விகடன் இதழ் முன்னெடுத்ததை இதழ்த்தொகுப்பில் உள்ள தலையங்கங்கள், கவிதைகள் வழி அறியலாம். மத்திய அரசின் இந்தித் திணிப்பே மாநில அளவில் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்குவதைத் தடைசெய்கின்றது என்பதையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

   தனிமனிதப் புகழைக் கொண்டாடுவதன் வழி அவர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகளின் சாதனைகளைப் பட்டியலிடுகிறார் நாரணதுரைக்கண்ணன். அந்த வரிசையில் கல்கி, டி.கே.சி., கவிமணி, தேவன், டி.கே.சண்முகம், வ.உ.சி., போன்ற எழுத்தாளர்களும் பி.வரதராஜலு நாயுடு, சர்.சண்முகம் போன்ற அரசியல் தலைவர்களும் இராமகிருஷ்ணர் -சாரதாதேவி போன்ற ஆன்மீகவாதிகளும் குறிப்பிடத்தக்கவர்கள். எழுத்தாளர்களின் நினைவினைப் போற்றும் வகையில் அவர்களது படைப்புகளின் தரத்தை மதிப்பிடு செய்கிறார்.

எழுத்துத் துறையில் தனது படைப்புகளின் வழியே ஒரு தனித்த வாசகப் பரம்பரையை உருவாக்கியதில் முதன்மையானவர் கல்கி. அவரது நினைவைப்போற்றும் விதமாக அவரது எழுத்தாற்றலைக் கவனப்படுத்துகிறார் நாரணதுரைக்கண்ணன். ‘மாபெரும் வரலாற்று நாவலாசிரியரான கல்கியின் கற்பனையாற்றல் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியது என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குத் தனது எழுத்துகளின் வழியே வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குத் தனது எழுத்துகளின் வழியே இவர் பதிலளித்தார் என்பது இங்குக் கவனத்துக்குரியது. ‘1950களில் தமிழ்ப் பத்திரிகைகளை அனைவரின் கையிலும் உலவச் செய்ததோடு, அவற்றை வாசகர்கள் வரிசையில் நின்று வாங்கும் அளவிற்கு ஆர்வத்தைத் தூண்டியவரும் இவரே. தமிழ் வாசகர் உலகின் ஒரு மாபெரும் அதிர்வு அலையை ஏற்படுத்தியவர். இன்று அவர் நம்மிடம் இல்லாமல் இருப்பது நாம் செய்த பெரும்பாக்கியமின்யேயாகும் (வல்லிக்கண்ணன், முத்துக்குமாரசாமி, ப., (தொ-ர்):2003:239)

நாரணதுரைக்கண்ணன் கல்கியின் மறைவை நினைவு கூறுவதோடு இலக்கியத்துறையில் ஈடுபட்டவர்களின் திடீர் மறைவை எண்ணி, கல்கி வருந்தியதையும் பதிவு செய்கிறார். குறிப்பாக டி.கே.சி., கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, யோகாசன ஆசிரிய குமாரசாமி ஆகியோரின் திடீர் மறைவு தன்னைப் பாதித்ததைப் போல் கல்கியையும் பாதித்திருக்கக்கூடும். எனவேதான் அவர் இத்தகைய மனநிலைக்கு ஆட்பட்டு விரக்தியாக எழுதினார் என்கிறார்

  கம்பராமாயணத்தைப் படிக்காத பாமர மக்களிடையே கொண்டு சென்ற பெருமைக்குரியவர் டி.கே.சி. ‘கம்ப ராமாயணத்தில் பல பாடல்களை, நீக்கிச் சில பாடல்களை அடித்துத் திருத்தினாலும் டி.கே.சி., தமிழ் இலக்கியம், கவிதை என்றாலே பயந்து  கொண்டிருந்தவர்களையெல்லாம் படிக்க வைத்துவிட்டார்; கேட்க வைத்துவிட்டார். தமிழகம் மட்டுமல்லாமல், தமிழ் வழங்கும இடங்களிலும் கம்பன் கவிதைகள் பரவியிருக்கின்றனவென்றால் அதற்கு அவரே பெருங்காரணராவர் (வல்லிக்கண்ணன்,முத்துக்குமாரசாமி, ப., (தொ-ர்): 2003: 202). டி.கே.சி. கம்பராமாயணத்தில் செய்த சில மாறுதல்கள் ஏற்கத்தக்கது அல்ல. எனினும் இவர் மக்களிடையே செய்த கம்பராமாயண பிரசங்கங்கள் போற்றுதலுக்குரியன என்கிறார் நாரணதுரைக்கண்ணன்.

      சமூகத் தளத்தில் பெண்குறித்த புரிதல்கள் வெவ்வேறாக இருந்தன. இதை இலக்கியங்கள் பலவாறு சித்திரித்தன. பெண்ணோ, மண்ணோ, பெண் பாவப்பிறவி, பெண்பாவத்தின் சின்னம், பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம் என்றெல்லாம் இடைக்காலத்தில் இயங்கி வந்த வேதாந்திகள் பெண்மீது ஒரு மாயையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதை ‘மங்கையராகப் பிறப்பதற்கே’ என்ற ஒரு பாடலடியின் மூலம் அந்தப் பொய்வுரட்டுகளை எல்லாம் கவிமணி தகர்த்தெறிந்துவிட்டார். அந்த அளவிற்கு இவரது கவித்துவம் வலியது. இவ்வாறு எழுத்தாளர்கள் குறித்த பல செய்திகளைப் பிரசண்ட விகடன் இதழ் முன்வைத்துள்ளதைப் பார்க்கமுடிகின்றது.

  இந்திய விடுதலைப் போராட்ட இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டு இயங்கியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதுதான் இவருக்குத் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் மீது தணியாத ஆர்வம் ஏற்படலானது. அது அந்நூல்களைப் பயின்று செம்பதிப்பாக வெளியிடும் அளவுக்கு அவரை உயர்த்தியது. குறிப்பாகத் திருக்குறளுக்குச் சிறந்ததொரு உரை வரைந்துள்ளார். இது இவரது இலக்கிய ஈடுபாட்டைக் காட்டுகிறது.இவரது விடுதலைப் போராட்டங்களையும் இலக்கிய ஆற்றல்களையும் இந்நாளில் நினைவுகூறுவது அவருக்கு நாம் ஆற்றும் நன்றிக் கடனாகும் (வல்லிக்கண்ணன், முத்துக்குமாரசாமி, ப., (தொ-ர்):2003:118). இத்தகைய செம்மாந்த கனவான்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் தமிழ்மொழி அரசாட்சியை எய்தவேண்டுமெனக் கவிஞர் தமிழவேள் விரும்பியுள்ளார்.

      பத்திரிகைத் துறையில் வெகுசன மக்களைக் கவர்ந்த பத்திரிகைகள் சில. அவற்றில் ஒன்று ஆனந்தவிகடன். இவ்விதழின் உதவியாசிரியராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கியவர் தேவன். இவரின் சிறந்த நாடகங்களைத் திருவல்லிக்கேணி கவின்கலைக் கழகம் மக்களிடையே கொண்டு சென்றது.இவர் 1957இல் மறைந்துவிட்டார். இவரது நிறைவேறாத ஆசையாகயிருந்தது எதுவென்றால் ‘தனது படைப்புகளை நூல்வடிவில் பார்க்க வேண்டும் என எண்ணியதாகும். அதை நிறைவேற்றுவது நமது கடமையாகும். இதைவிட்டு இறந்துபோன ஒரு எழுத்தாளனுக்கு ஞாபகச் சின்னங்களை எழுப்பிக் கொண்டாடுவதைத் தவிர்ந்து அவனது எண்ணத்தை நிறைவேற்றுதல் சாலச்சிறந்ததாகும். அப்படைப்பாளியின் படைப்புகளை நூலாக்கியப் பின்னர் வேண்டுமானால் ஞாபகச் சின்னங்களை ஏற்படுத்தலாம்’ என்று நாரணதுரைக்கண்ணன் முன்வைத்திருக்கும் கருத்தை இவ்விதழ்த் தொகுப்பின் ஊடாகக் காணலாம்.

   விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டதன் மூலம் தனது பெரும் சொத்தை இழந்தார். பி.வரதராஜலு. அதன்பின்னர் வெகுசிரத்தையாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் பல முக்கியப் பதவிகளை வகித்தார். இதன்வழிச் சமூக விடுதலையினை முன்னெடுத்தார். தமிழுலகம் இவரைத் தென்னாட்டுத் திலகர் என்று சிறப்பித்தது. இதைப்போல் சர்.சண்முகம் செட்டியார்இந்திய அளவில் நிதியமைச்சர், துணைவேந்தர், தொழிலதிபர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதோடு கோயம்புத்தூரைத் தமிழகத்தின் மான்செஸ்டர் ஆக்குவதற்கு இவர் வகுத்த அரசியல் ஆலோசனைகள் மிக முக்கியமாகும். இத்தகைய அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்திய தலைவர்களின் மறைவில் அவர்களது சிறப்பைக் கொண்டாடாமல், அவர்களை இழிவுபடுத்தும் நயவஞ்சகர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என்கிறார் நாரணதுரைக்கண்ணன்.

   நாடகத்துறை சார்ந்து இயங்கிய டி.கே.சண்முகம் உள்ளிட்ட நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். தங்களால் நடத்தப்படும்/ நடிக்கப்படும் நாடகங்களின் வழி மக்களிடையே விடுதலை உணர்வையும், தாய்மொழிப் பற்றையும் விதைத்துள்ளனர். தங்களைப் போன்று இயங்கும் சக கலைஞர்களின் நடிப்புகளை/ திறமைகளை மனதாரப் போற்றிப் பாராட்டுகிற நல்லுள்ளம் கொண்டவர்களாகவும் விளங்கியுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் டி.கே.எஸ்.

    ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து இயங்கும் கலைஞர்கள் தன்னைப்போல் இயங்கும் சக கலைஞனை மதிப்பது குறைவு. இத்தன்மை இத்தொகுப்புகளில் உள்ள ‘நாடகங்கள்’ தொடர்பான விமர்சனங்களில் இல்லை. நாடகத்துறையில் பெரும் பங்களிப்பைச் செய்த டி.கே.எஸ். தன்னைப் போன்ற நடிகர்களைத் தனக்குச் சமமாகக் கருதி, பாராட்டி வரவேற்றுள்ளார். இது கலைஞர்களுக்கிடையேயான ஒரு ஆழமான புரிதலை / நட்புறவைக் காட்டுகின்றது. (வல்லிக்கண்ணன், முத்துக்குமாரசாமி, ப., (தொ-ர்):2003:142-146) இவ்வாறு சக நடிகனின் நடிப்பைக் கொண்டாடும் மனநிலை நாடகக் கலைஞர்களுக்கு இருந்ததை இவ்விதழ்த் தொகுப்பின் வழி உள்வாங்க முடிகிறது.

    நாடகங்களின் வழியேயும் தமிழ் இலக்கிய வளத்தைப் பாமர மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியை இவ்விதழாசிரியர் பாராட்டுகிறார். அந்த வகையில் Ôதமிழ் செல்வம்Õ என்ற நாடகம் இதனைச் சாத்தியப்படுத்தியது. சமூகத் தளத்தில் தமிழ்மொழியின் சிறப்பை மிகச் சாதுரியமாக இந்நாடகம் சொல்லிச் செல்கிறது.

      தனிமனித உணர்வை மையமிட்டக் கதைகள் பிரசண்ட விகடன் இதழ்த்தொகுப்பில் மிகுதியாக உள்ளன. இதழ்த்தொகுபபின் பெரும்பகுதியைச் சிறுகதைகளே ஆக்கிரமித்துள்ளன. இவ்விதழின் ஆசிரியர் புதிய - இளைய எழுத்தாளர்களின் படைப்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வல்லிக்கண்ணன் அடையாளப்படுத்துகிறார். இதைப்பற்றித் தனது தமிழில் சிறுபத்திரிகைகள் என்ற நூலிலும் (1991:43). இவ்விதழ்த்தொகுப்பின் முன்னுரையிலும் இவர் பதிவு செய்துள்ளனர். ஆனால், வர் 1930 - 40 களில் வெளிவந்த சில இதழ்களின் தன்மை குறித்து முன்வைத்த கருத்தில் பிரசண்ட விகடன் குறித்தும் பேசியுள்ளார். அது மறுவாசிப்புக்குரியது. (1991:216)

-   இளம் பெண்கள் மீது ஆணிய வர்க்கத்தால் இழைக்கப்படும் அநீதிகளை மையமிட்ட கதைகள்

-    இளம் பெண்ணுக்குரிய உரிமைகள் - திருமண உரிமைகள் தடுக்கப்படும்போது அவள் இறப்பை எதிர்கொள்ளும் சூழலை மையமிட்ட கதை

-    விதவைப் பெண்களுக்கு எதிராகப் பணக்காரர்கள் உண்டாக்கும் துன்பங்கள். அதைக் கட்டுடைக்க முயலும் இளைஞர் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமிட்ட கதை.

-  அந்நிய நாட்டுப்பெண் இந்திய அரசக்குடிமகனை விரும்பிக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதால், இந்திய வமிசாவளிகள் அவளுக்கு ஏற்படுத்தும் துன்பங்கள். இறுதியில் அத்துனபத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவள் தனது வாழ்க்கையே துறக்கும் நிகழ்வை மையமிட்ட கதை.

-   நாகரிக வயப்பட்ட இடைத்தட்டு மக்கள் தங்களுக்குக்கீழ் உள்ள நாகரிகமற்றவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பை முன்னிறுத்தும் கதை.

-  தனது கணவனின் இன்ப-துன்ப நிகழ்வுகளோடு தனது உணர்வினை/வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் ஆதர்ச மனைவியைப் பற்றிய கதை.

-  தனது உரிமையை நிலைநாட்ட தனது செல்வசெழிப்பு மிக்க குடடும்ப வாழ்வைத் துறக்க முயலும் இளந்தலைமுறையினரின் உணர்வுகளை மையமிட்ட கதை

எனப் பிரசண்ட விகடன் இதழ்த்தொகுப்பிலுள்ள கதைகள் தனிமனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை மையமிட்டே படைக்கப்பட்டுள்ளன. ஆனால் வல்லிக்கண்ணன் முன்னுரையில் கூறியதைப்போல் இளம்படைப்பாளர்களின் முதல் கதைகள் எதுவும் இத்தொகுப்பும் இடம்பெறவில்லை என்பது கவனத்துக்குரியது.

     1950களில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்திய ‘சாகித்ய அகடாமி’ விருது தேர்வு முறைமை குறித்த சில எதிர்மறையான கருத்துகளுக்குப் பிரசண்ட விகடன் இதழ் இடமளித்துள்ளது. 40முதல் 80 பக்கங்கள்கொண்ட புத்தகங்களை விருதிற்குத் தேர்வு செய்து, அப்புத்தகத்தைச் சமூக முன்னேற்றத்தை முன்வைக்கும் புத்தகமாக அங்கீகரிக்கின்றனர். மேலும் அப்புத்தகத்தின் 1000 பிரதிகளை வாங்கிக் கொண்டு அதற்குப் பரிசாக ரூ.100னையும் தருகின்றனர். இதுகுறித்த கண்டனங்களைப் பல இதழ்கள் இச்சமகாலத்தில் முன்னெடுத்துள்ளன. அதில்பிரசண்ட விகடனும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. எழுத்தாளர்களின் நலனில் அதிக அக்கறையை ஏற்படுத்தும் விதமாக உலக நாடுகளின்ல இருப்பதைப் போன்று ‘காப்பிரைட் சட்டம்’ (copy Right) எழுத்தாளனுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதற்கு ஆதரவாகவும் இவ்விதழ் செயல்பட்டுள்ளது.
-   புதியவர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்கிய இதழாக / பத்திரிகையாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது பிரசண்டவிகடன். அதிலும் குறிப்பாக அப்படைப்பாளிகளின் முதல் கதைகள் இவ்விதழிலேயே வெளியிடப்பட்டதாக வரலாறு சுட்டுகின்றது. ஆனால் இவ்விதழில் தொகுக்கப்பட்டுள்ள கதைகளைத் தேடிப்பார்த்தால் அதற்கான எச்சங்கள் சிறிதுகூட இல்லை.

-       விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்பும் வெளிவந்த இவ்விதழ் இவ்விரு காலகட்டம் தொடர்பான நிகழ்வுகளைக் கட்டாயம் பதிவு செய்திருக்கும். இவ்விதழ்த்தொகுபபு முயற்சியில் விடுதலைக்குப் பிந்தைய காலகட்ட அரசியலமைப்பு, இலக்கிய வளர்ச்சி, சமூகச் சிக்கல்கள் தொடர்பான தலையங்கங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதற்கு முந்தைய பதிவுகள் எதுவும் இல்லை.

-     1930களின் இடைப்பகுதிகளிலிருந்து 1960கள் வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த இவ்விதழ், சமூக இயங்குதளத்திலும் பத்திரிகை வரலாற்றிலும் எவ்வகை அதிர்வலைகளை ஏற்படுத்தின என்பதனை முழுமையாக அவதானிக்க முடியவில்லை. இவ்விதழ்களின் மூலங்கள் கிடைக்காத சூழலே இதற்குக் காரணமாகும்.

-       கட்டுரை எழுதுதலின் பொருட்டு இவ்விதழ்களின் மூலங்களைத் தேடி, தொகுக்கப்பட்ட பகுதியோடு ஒப்பிட்டுப் பார்க்க முயன்றபோது இவ்விதழ்கள் எங்கும் கிடைக்கப்பெறவில்லை. ஒரேயொரு பொங்கல் சிறப்பிதழ் மட்டுமே கிடைத்தது. அதிலும் குறிப்பாக அவ்விதழின் மலர் - 1 மட்டுமே கிடைத்தது.  அதுவும் சிதிலமடைந்துள்ள நிலையில்  இருந்ததால் அதிலுள்ள தகவல்களை இக்கட்டுரையில் சேர்க்க முடியவில்லை.

- இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதை, கட்டுரை, கதை உள்ளிட்டவை தொகுக்கப்பட்டுள்ள காலகட்டங்களில் உள்ளவற்றையும் தொகுப்பாசிரியர்கள் முழுமையாகத் தொகுக்கவில்லை. இவ்வாறு அனைத்து நிலையிலும் ஒரு முழுமையற்ற தொகுப்பாகவே பிரசண்ட விகடன் இதழ்த்தொகுப்பு உள்ளது.

-   சோதிடம், விளம்பரம், துணுக்குச் செய்திகள் பற்றிய தரவுகள் ஏதும் இவ்விதழ்த் தொகுப்பில் இல்லை. ஆனால் முன்னுரையில் இச்செய்திகளுக்குப் பிரசண்ட விகடன் உரிய அங்கீகாரத்தினை வழங்கியதாகத் தொகுப்பாளர்களுள் ஒருவரான வல்லிக்கண்ணன் பதிவு செய்கிறார்.

      இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த பத்திரிகைகளிள் பிரசண்ட விகடனும் ஒன்று. இவ்விதழ் 1932இன் இடைப்பகுதியில் முனுசாமி முதலியாரால் தொடங்கப்பட்டது. மாதம் இருமுறை இதழாக வெளிவந்த இவ்விதழின் ஆசிரியராக 1935 வாக்கில் நாரண துரைக்கண்ணன் பொறுப்பேற்றார். அதன்பின்பே இவ்விதழ் வெகுவாக வளர்ச்சியடைந்தது. 1932 - 1965 வரை இவ்விதழ் வெளிவந்துள்ளது. கலை, இலக்கியம், செய்தி, அரசியல் இதழாகத்தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது.

     பிரசண்ட விகடன் இதழ்களின் முதல்பக்கம் இதழின் உள்ளேயுள்ள செய்திகளைத் தொகுத்துத்தரும் உள்ளுறைப் பகுதியாக விளங்குகிறது. இதில் இடம்பெற்ற தலையங்கம், காலச்சுக்கரம் இரண்டு பகுதிகளும் அரசியல் பற்றிய செய்திக் கட்டுரையாக வந்தன. சோதிடம் பற்றிய கருத்துகள் ‘எதிர்கால பலன்’ என்னும் தலைப்பில் வெளிவந்தன. ‘ரேடியோ டைரி’ என்னும் பகுதியில் ’கானப்ரியன்’ என்பவரால் விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. விளம்பரங்களும் துணுக்குகளும் இடம்பெற்றுள்ளன. பிரசண்ட விகடனில் அதிகமாக இடம்பெறுவது சிறுகதைகளே. அதற்கு அடுத்தபடியாகக் கவிதைகள்இடம்பெறும். பத்திரிகைவரலாற்றில் ஒரு கலை இலக்கிய இதழாகப் பிரசண்ட விகடன் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.
துணைநூற்பட்டியல்
1.  அரசு.வீ, சிறுபத்திரிகை அரசியல், பரிசல் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, 2006.
2.  துர்கா,கி., தமிழ்ச் சிறுகதை வரலாறு (பிரசண்ட விகடன் கதைகள் (1951-1952)),                      ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1997.
3.  வல்லிக்கண்ணன், தமிழில் சிறுபத்திரிகைகள், ஐந்திணை பதிப்பகம், சென்னை, 1991.
4. வல்லிக்கண்ணன், முத்துக்குமாரசாமி, ப., (தொ-ர்.). பிரசண்ட விகடன் இதழ்த்தொகுப்பு          பாகம் ஒன்று, பாகம் இரண்டு, கலைஞன் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2003.

5. முத்தையா வெள்ளையன், இளமாறன், பா., சிவக்குமார்,ஜ., கணேஷ்,கோ., (தொ-ர்),                 தமிழ்நூல் தொகுப்பு வரலாறு, புதிய புத்தகம் பேசுது, 2010

Comments

Popular posts from this blog

புதுக்கவிதை : இலக்கண வரையறை உருவாக்க முயற்சிகள்

திருக்குறள் யாப்பியல் ஆய்வுகள் (பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு ஆய்வுகளை முன்வைத்து)

நாலடியார் யாப்பியல்: யாப்பருங்கல விருத்தியுரை